Sunday 5 October 2014

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல்

கிரிஷாக் எக்ஸ்பிரஸ்  - பராவ்னி எக்ஸ்பிரஸ் ரெயில் | எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல்; பெட்டிகள் தூக்கி வீசப்பட்டது 12 பேர் பலி 45 பேர் படுகாயம்|
பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 01,2014, 7:11 PM IST

கோரக்பூர், உத்தரபிரதேசத்தில் சிக்னலை மதிக்காமல் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், மற்றொரு ரெயிலுடன் மோதிய கோர சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

ரெயில்கள் மோதல்
  உத்தரபிரதேசத்தின் மதுவாதீயில் இருந்து லக்னோ செல்லும் கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 11 மணியளவில் கோரக்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. நந்தா நகர் கிராசிங் அருகே சென்ற போது ரெயிலை நிறுத்துவதற்கான சிக்னல் போடப்பட்டிருந்தது.
இந்த சிக்னலையும் மீறி கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர், ரெயிலை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது லக்னோவில் இருந்து வந்து கொண்டிருந்த பராவ்னி எக்ஸ்பிரஸ் ரெயில், இணைப்பு தண்டவாளம் மூலம் அடுத்த தண்டவாளத்தில் திரும்பி கொண்டிருந்தது. ஆனால் கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் மிகவும் வேகமாக வந்ததால், அது பராவ்னி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.  3 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன

                  அந்த ரெயில் மோதிய வேகத்தில், பராவ்னி எக்ஸ்பிரசின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த சேதமடைந்தன.
நள்ளிரவு நேரம் என்பதால், ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி, ‘அய்யோ’ என மரண ஓலமிட்டனர். இந்த கோர சம்பவத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 45 பேர் பலத்த காயமடைந்தனர்.
ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சி. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகளும், மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 12 பேரின் உடல் நிலை கவலைக் கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்ட விசாரணையில், கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர்களின் அலட்சியம்தான் விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயிலின் டிரைவர் ராம் பகதூர் மற்றும் துணை டிரைவர் சத்யஜீத் ஆகிய இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தார். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட அவர், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் இழப்பீடு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவும் இரங்கல் தெரிவித்து இருப்பதுடன், நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். இந்த விபத்தால் கோரக்பூர்வாரணாசி இடையே ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Cheap Train Ticket+Bus Ticket +Flight Ticket Booking

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.